வேளாண்துறை கொடுத்த விதை முளைக்காததால் இணை இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில் வேளாண்மைத்துறையின் இணை இயக்குனருடைய அலுவலகத்தை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அடித்து உடைத்துள்ளனர். இந்தக்காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் வேளாண்மைத்துறை சார்பாக விதை நெல் வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், வேளாண்மைத்துறையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சில விதைகள் தரமானதாக இல்லை என கூறபட்டுள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் கொடுக்கப்பட்ட தானிய விதைகள் முளைக்கவில்லை என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியினர் குற்றம்சாட்டினர். இதனால் தொடர்ந்து, முளைக்காத விதைகள் பற்றி லத்தூர் விவசாயத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க அக்கட்சினர் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் புகார் அளிக்காமல் திடீரென்று அதிரடியில் ஈடுபட்ட அவர்கள் கோஷமிட்டபடியே அலுவலகத்தை அடித்து உடைதுள்ளனர். தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்த கண்ணாடி, கணினி, போன்றவற்றை தூள்தூளாக உடைத்தெறிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.