Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பாகுபாடு காட்டி தனிமையை உணர்த்தினார்கள்” மனம் திறந்த கிரிக்கெட் வீரர் நிதினி…!!

தென்ஆப்பிரிக்க அணியின் சக வீரர்களை இனப்பாகுபாடு காட்டியதால் தனிமையை உணர்ந்ததாக நிதினி குறிப்பிட்டுள்ளார்.

‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்திற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர் மகாயா நிதினியும் ஆதரவு தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கறுப்பின வீரர் இவர். வேகப்பந்து வீச்சாளரான இவர் 101 டெஸ்டில் விளையாடி 390 விக்கெட்களையும், 173 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1998 – 2011ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய சக வீரர்களே தன்னிடம் இனவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டதாக தற்போது வெளியிட்டுள்ளார். டொனால்டு, குளுஸ்னர் , காலிஸ், ஷான் பொல்லாக், கிப்ஸ், கிரேமி சுமித் ஆகியோருடன் இணைந்து விளையாடிய நிதினி அளித்த பேட்டியில், “சர்வதேச கிரிக்கெட்டில் எனது வாழ்க்கை முழுவதும் தனிமையே உணர்ந்தேன்.

இரவு உணவிற்கு சாப்பிட போகலாம் என்று எந்த வீரர்களும் எனது அறைக்கு வந்து அழைக்க மாட்டார்கள். என் முன்னால் தான் திட்டம் போடுவார்கள் ஆனால் கிளம்பும்போது என்னை தவிர்த்து விடுவார்கள். சாப்பிடும் அறைக்கு சென்றாலும் என் அருகில் யாரும் உட்கார மாட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து இருக்கிறோம், ஒன்றாக விளையாடுகிறோம், பயிற்சிகளை மேற்கொள்கிறோம், ஒரே தேசிய கீதத்தை பாடுகிறோம் ஆனால் சக வீரர்களின் இத்தகைய பாகுபாட்டை கடந்துதான் சாதிக்க முடிகிறது.

இதனாலேயே ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படும்போது அனைவருடனும் பேருந்தில் செல்வதை தவிர்த்து, ஓடியே செல்வேன். நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்று யாரும் புரிந்து கொண்டதில்லை நானும் இதைப் பற்றி எவரிடமும் பேசியதும் இல்லை. தென்-ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறும் போது அனைவரும் மகிழ்ச்சியில் தாண்டவமாடுவார்கள். ஆனால் தோல்வியின் போது என்னை  தான் முதலில் குறை கூறுவார்கள். ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய எனது மகனும் இனவெறி பிரச்சனையை சந்தித்ததாக கூறியுள்ளார்” என்று நிதினி குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |