கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கி சேவை செய்து வருகின்றனர் ஹைதராபாத் இளைஞர்கள்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ சிகிச்சை பெறுவது மிக அவசியம். அவ்வாறு சிகிச்சை பெறும் பொழுது அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் கதி என்னவாகும் என்று யோசித்து உள்ளனர் ஹைதராபாத் இளைஞர்கள். இதனால் கவனிப்பு இல்லாமல் இருக்கும் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.விலங்குகள் உரிமை ஆர்வலர் பன்னீரு தேஜா தான் இந்த அமைப்பை அறிமுகப்படுத்தியவர். இவருடன் 5 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவும் செயல்படுகிறது.
இது பற்றி கூறும் பன்னீரு தேஜா,” கொரோனா பாதித்த உரிமையாளர்கள் தங்கள் நாய்களை கைவிடுவது ஒரு துயரமான சம்பவமாக இருக்கிறது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த பெரும்பாலான சந்தர்ப்பங்களில் செல்லப்பிராணிகளை பராமரிக்க யாரும் வருவதில்லை. எனவே நாங்கள் இந்த சேவையை வழங்க முடிவு செய்தோம் ஒரு செல்லப் பிராணி அழைத்து வரும்போது கையுறைகள் முக கவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். மருத்துவமனையில் அல்லது தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருக்கும் உரிமையாளர்களிடம் நாயை அவரது வீட்டிற்கு வெளியே கட்டுமாறு சொல்லிவிடுவோம் நாங்கள் அங்கு சென்று கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி விட்டு அழைத்து வருவோம் பிறகு எங்கள் மையத்தில் மருந்து குளியலும் கொடுத்து வருகிறோம்.
தேஜாவும் அவரது குழுவினரும் இந்த சேவையை தொடங்கி ஒரு வாரம் ஆகிறது இது வரை அவர்கள் மீட்புக்காக பல அழைப்புகளை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாய்களை கவனித்து வருகிறோம். எங்கள் மையத்தில் சுமார் 22 நாய்கள் வரை தங்க வைக்கலாம். பூனைகளுக்கு தனியிட வசதியும் இருக்கிறது. பெரிய நாய்களுக்கு ஒரு நாளைக்கு 500 மற்றும் சிறிய நாய்கள் பூனைகளுக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறோம் இதன் மூலமாக செல்லப்பிராணிகளுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து பராமரிப்பையும் நாங்கள் வழங்குகிறோம்” என்று தேஜா கூறியுள்ளார்.