ஆவடி அருகே கோழி தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடிஅடுத்துள்ள ஆரிக்கபேடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (40). இவர் தனது வீட்டில் கோழி வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். சசிகுமாரின் கோழிகள் அவ்வப்போது, அன்பழகன் வீட்டு வளாகத்தில் மேய்ந்து வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, சசிகுமார், அன்பழகன் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் சசிகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக சசிகுமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறையினர் அன்பழகனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழியால் ஏற்பட்ட இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.