டவுசரை குட்டையாக தைத்துவிட்டதால் காவல்நிலையம் சென்று ஒரு நபர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வாழ்ந்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே இவர் சமீபத்தில் இரண்டு மீட்டர் துணியை எடுத்துக் கொண்டு தையல்காரரிடம் சென்று தனக்கு வேண்டிய அளவிற்கு டவுசர் தைத்து கொடுக்குமாறு கொடுத்துள்ளார். தையல்காரரும் அளவு எடுத்து வைத்துக்கொண்டு துணியை பெற்றுக்கொண்டு கூலியாக 70 ரூபாய் வாங்கியுள்ளார். துபேவும் சரி என்று கூறிவிட்டு தனது டவுசரை வாங்க இரண்டு நாள் கழித்து அங்கு சென்று உள்ளார். தையல்காரரும் தயாராக வைத்திருந்த டவுசரை கொடுத்துள்ளார்.
அதை துபே அணிந்து பார்த்த போது மிகவும் சிறியதாக இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த துபே தான் கூறிய அளவில் ஏன் தைக்கவில்லை என தகராறு செய்துள்ளார். மேலும் புதிதாக துணி வாங்கி தான் கூறிய அளவில் தைத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் தையல்காரர் மறுக்கவே குட்டையான டவுசருடன் காவல் நிலையம் சென்று தையல்காரர் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் போலீஸார் துபேயிடம் நீங்கள் இதற்கு நிவாரணம் வேண்டும் என்றால் நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று ஆலோசனை கூறி அவரை திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.