மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி , 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 59 ரன்னும், குரு ணால் பாண்டியா 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிக பட்சமாக கேதர் ஜாதவ் 58 ரன் எடுத்தார்.
தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ’’எங்களின் தொடக்கம் நன்றாகவே இருந்தது. நாங்கள் பந்துவீசும் போது, முதல் 10முதல் 12 ஓவர் வரை சரியாகவே சென்றது. அதன் பிறகு சில கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டோம். ஃபீல்டிங்கில் கொஞ்சம் சொதப்பினோம். பின்னர் கடைசி கட்ட ஓவர் களில் சரியாக பந்துவீசாமல் ரன்களை வாரி வழங்கினோம். இதனால் நாங்கள் தோல்வி அடைய நேர்ந்தது.
எங்களின் திட்டங்களைச் சரியாக செயல்படுத்த முடியவில்லை. எந்த பேட்ஸ்மேனை டார்கெட் பண்ண வேண்டும், பவுண்டரிகள் செல்வதை எவ்வாறு குறைக்க வேண்டும், ரன்களை அதிகம் கொடுப்பதை எந்த வகையில் குறைக்க வேண்டும் என்பதை பந்துவீச்சாளர்கள் தெரிந்திருக்க வேண்டும். எங்களது அணியில் சில வீரர்கள் இணையவில்லை. இப்போது ஆல்ரவுண்டர் பிராவோவும், காயமடைந்துள்ளார். ஏற்கனவே சில வீரர்கள் காயத்தினால் விலகிவிட்டனர். அதில் ஆல் ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளருமான டேவிட் வில்லே சொந்த காரணமாகவும், வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாகவும் அணியில் இடம்பெறவில்லை. அடுத்தப் போட்டியின் போது ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து எங்கள் அணியில் சில மாற்றங்கள் இருக்கும்’’ என்றார்.