போராட்டத்தில் காவல்துறையினர் மீது மிளகுப்பொடியை போராட்டக்காரர்கள் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுதும் கொரோனா வைரஸைக் கையாள்வதில் ஒரு சில அரசுகளைத் தவிர மற்ற அரசுகள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னாமாகி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் புள்ளிவிவரங்களை மறைப்பது, ஊழல் போன்ற விவகாரங்கள், லாக்டவுன், பொருளாதார இழப்பு ஆகியவை மக்களிடையே பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலில் ஜெரூசலேமில் சனிக்கிழமையன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்ஹாயு வீட்டின் முன்னாலும் டெல் அவிவில் உள்ள பூங்கா ஒன்றிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
போலீஸ் அனுமதியுடன் தான் இந்த போராட்டம் நடைபெற்றது, ஆனால் சாலை மறியல் என்று ஆன போது போலீஸார் தடியடி மற்றும் தண்ணீர்பீய்ச்சி அடித்து நடவடிக்கைகள் மூலம் கும்பலை அடக்கினார்கள். போராட்டக்காரர்களும் காவலர்களின் மீது மிளகுப்பொடியைத் தூவி போராட்டம் செய்துள்ளனர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். சமீபகாலமாக நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேலானோர்கள் இஸ்ரேலில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு புதிய முடக்க உத்தரவுகள் அமலில் இருக்கின்ற நிலையில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இஸ்ரேல் நாட்டில் மக்கள் தொகை 90 லட்சமாகும் எனவே இங்கு தொற்றை கட்டுப்படுத்துவது எளிதுதான் என்று பிரதமர் நெதன்ஹாயு கூறியுள்ளார்.
மக்கள் கோபத்தை தணிப்பதற்காக பிரதமர் அனைவருக்கும் பணம் கொடுக்க முடிவெடுத்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் ரொக்க உதவி செய்ய வேண்டுமே தவிர நாடு முழுதுமா ரொக்கம் கொடுப்பார்கள்? என்று சிலர் பிரதமரை விமர்சித்து வருகின்றார்கள். நாடு முழுதும் கொடுக்க பணம் உள்ளது, ஆனால் கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் போதிய அளவில் நடத்தப்படவில்லை இது ஏன்? என்று சில வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அந்நாட்டு பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்களும் அங்கு எழுந்து வருகின்றன. இன்றும் ஜெருசலேமில் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் நெதன்ஹாயு ஆஜராஜகப் போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.