அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இராணுவ டாக்டர்கள் களமிறங்க உள்ளனர்.
கொரோனா நோயாளிகளால் அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இந்நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக ராணுவ டாக்டர்கள் களம் இறங்க இருக்கிறார்கள். கொரோனா என்ற கொடூர கிருமியால் அமெரிக்கவில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக பாதிப்பை சந்தித்து வருகின்ற நாடாக இன்னும் அமெரிக்காதான் இருக்கின்றது. இங்கு தொற்று எண்ணிக்கை நேற்று வரை 37,11,464 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,120 ஆக அதிகரித்துள்ளது. புளோரிடா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா போன்ற மாகாணங்களில் நோய் தொற்று தொடர்ந்து 10,000க்கு மேல் அதிகரித்து வருகிறது. 80 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பாதிப்புக்கு ஆளாகி இருப்பது அவர்களின் குடும்பத்தினருக்கு வேதனையை அளித்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க ஊரடங்கை சற்று தளர்த்தியதும், பலர் முகக்கவசங்களை அணிய மறுத்து, சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் இருப்பதால் தான் இந்த மாகாணங்களில் தொடர்ந்து தொற்று பரவ காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் முக்கியமாக தீவிர சிகிச்சை பகுதிகளில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இராணுவ டாக்டர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள்.பல இடங்களில் மிக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு படுக்கை வசதி தேவைப்படுவதால், சிறிது குணமான நோயாளிகள் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
சில இடங்களில் தீவிர சிகிச்சை அளிக்கும் பிரிவில் இடம் இல்லாததால் அவசர சிகிச்சை பிரிவில் சுவாசப்பிரச்சனைகளால் திண்டாடுகிற நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவமனைகளில் சேர்க்க நோயாளிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக டெக்சாஸ் நகரில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியின் மருத்துவர் ஆலிசன் ஹாடோக் கூறியிருக்கிறார். மேலும் இதுபோன்ற நோயாளிகளின் எழுச்சியை நாங்கள் பார்த்ததில்லை. எங்களால் முடிந்தவற்றை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கொரோனாவின் புதிய எழுச்சியால் இலையுதிர் காலங்களில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு போக வாய்ப்பிருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.