செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குவதும், புதுச்சேரியில் பாதிப்பு 2000 தாண்டி வரும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டு வரும் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் அண்டை மாவட்டமான செங்கல்பட்டில் இன்று மேலும் 259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 93 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இதுவரை 2092 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனா மரணம் 29 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.