சொந்த மகளை தெருவில் ஓட ஓட துரத்திச் சென்று பல பேர் முன்னிலையில் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த 30 வயது அஹ்லம் (Ahlam) என்ற பெண் தான் தந்தையின் கொடூர செயலால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.. அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொழுதில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடியிருப்பிலிருந்து யாராவது என்னை காப்பாற்றுங்கள் என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அவரை, விடாமல் துரத்தி வந்த தந்தை சிமெண்ட் கல்லால் ஓங்கி தலையில் அடித்துள்ளார்.. இந்த தாக்குதலில் நிலைகுலைந்து அப்படியே தரையில் சரிந்து விழுந்த அஹ்லமை சாகும் வரை அந்த நபர் கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
மரண பயத்தில் அலறிக்கொண்டே அஹ்லம் ஓடி வர, இந்த சத்தத்தை கேட்டு தெருவில் கூடிய பொதுமக்கள் மத்தியில் இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.. அதுமட்டுமில்லாமல் அஹ்லம் அவரது தாயாரிடம், காப்பாற்றும்படி கெஞ்சி கேட்டும் அவர் சிலையாக நின்று கொண்டிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் அந்த கொடூர தந்தையை அங்கிருந்த மக்கள் சிலர் தடுத்து நிறுத்த முயன்ற போதும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறுகின்றனர்.
இதனிடையே, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மகளின் சடலத்தின் அருகே நின்று டீ குடித்தபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
அஹ்லம் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஜோர்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது ஆணவக்கொலை என்றும், அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக கருத்துக்களை வாதிட்டு வருகின்றனர்.