ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியானது வரும் நவம்பர் மாததிற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்துவதற்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருத்துவ நிறுவனமான ஆஸ்திராஜனேகா உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி நம்பிக்கை கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டு வர வழி பிறந்துவிடும் என்ற புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 100 கோடி ‘டோஸ்’ விநியோகிக்க இந்திய சீரம் இன்ஸ்ட்யூட் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வரும் என்றும் இந்த தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்திருக்கிறது.
இதுபற்றி சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறுகையில், “இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் சீரம் நிறுவனத்தில் தயார் செய்யப்படும் தடுப்பூசியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் உருவாக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி கிடைக்கும். சோதனைசெய்யப்படாத இந்த தடுப்பூசிக்கு 200 மில்லியன் டாலர்களை ஒதுக்க சரியாக 30 நிமிடங்கள் ஆகியுள்ளது. மீதமுள்ள கட்டங்களில் மருத்துவ பரிசோதனைகள் நல்ல பலன்களை பெறவில்லையெனில் முழு வேலையும் பாலாப்போகும் அபாயங்கள் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இது முடிவடைய இரண்டில் இருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துவத்திருக்கிறோம். இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று கூறி அனுமதி வழங்கினால் உற்பத்தியை தொடங்குவோம். தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக அமையும் என்று தெரியவில்லை மற்றும் எத்தனை பேர் இதில் பயனடைவார்கள் என்றும் தெரியவில்லை” என அவர் கூறியுள்ளார்.