தமிழகத்தில் விடுபட்ட மரணங்கள் என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கொரோணா பரவலைத் தடுக்கும் அக்கறை இவர்களுக்கு இல்லை. கொரோனா பரவல் இல்லையென்று மறைந்தால் போதும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை காப்பாற்றும் அக்கறை கிடையவே கிடையாது. ஆனால் மரணத்தை மறைத்தால் போதும். இப்படி நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்காங்க. மே மாதம் 28ஆம் தேதி இறந்த ஒருவரின் மரணம் ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வருது. மே 24 ஆம் தேதியிலிருந்து ஜூன் 7-ஆம் தேதி வரை மரணமடைந்த 7 பேரின் மரணங்கள் ஜூன் 15ஆம் தேதி செய்தி குறிப்பில் வருது.
இதுதான் அரசாங்கம் நடத்தும் லட்சணமா ?
மார்ச் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் 10ஆம் தேதி வரை மரணமடைந்த 444 பேர் மரணங்கள் ஜூலை 22 ஆம் தேதி செய்தி குறிப்பில் வருது என்றால் இதுதான் அரசாங்கம் நடத்தும் லட்சணமா ? என்று நான் கேட்கிறேன். தமிழ்நாட்டில் கொரோனாவே இல்லை என்று முதலில் மறைத்தது தமிழக அரசு. இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மறைகிறது. மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம். மரணத்தை மறைந்தார்கள்… இப்போது மறக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமானதும் வேறு வழி இல்லாமல்… வெளியில் சொல்லி விட்டார்கள்…. இவர்களது அரசியல் லாபங்களுக்கு மக்களை பலியிடுகிறார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
மன்னிப்பு கேட்க வேண்டும்:
தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை.. கொரோனா உயிரிழப்பு விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய் என்று இப்போது அரசு அறிக்கையே மெய்ப்பித்து விட்டது. அப்பாவி மக்களின் மரணத்தை மறைத்த பழனிச்சாமி, மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுவரை அவர் எத்தனையோ பொய்கள் சொல்லி இருந்தாலும், இப்போது சொன்னது மக்களின் உயிரில் விளையாடியது ஆகும். எனவே அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா ?
கொரோனா பரவ தொடங்கியது முதல் இன்று வரை இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக, மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு இந்த அரசாங்கம் உண்மையாக இருப்பதாகச் சொல்ல முடியும். ICMR பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சொல்லிவருகிறது, அப்படித்தான் இந்த அரசாங்கம் நடக்கிறதா ? என்றால் இல்லை. ICMR நெறிமுறைகளை மக்களுக்கு சொல்லி அதன்படிதான் அரசு நடப்பதாக உறுதிப்படுத்தவேண்டும். கொரோனா குறித்த தகவல்கள் வெளிப்படைத்தன்மை வேண்டும். சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா ? இல்லையா ? பரிசோதனை எண்ணிக்கை மாவட்ட வாரியாக கொடுங்கள் என்று நான் தினமும் கேட்டேன், சரியான பதில் இல்லை.
எரிந்து விழுந்தார்கள்:
சமூகத்தின் கடைசி வரை கொரோனா போய்விட்டது, அதன்பிறகும் சமூக பரவல் இல்லை என்று சொல்வது மகா மோசடி என்று மூத்த ஆராய்ச்சியாளர் ஜெயப்பிரகாஷ் சொல்லியிருக்கிறார். கொரோனா மரணங்களில் மர்மம் உள்ளது என்பது குறித்து நான் சொன்ன போதெல்லாம்… அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று எரிந்து விழுந்தார்கள் தமிழ்நாட்டு அமைச்சர்கள். இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளது. இன்னும் இதுபோல் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்ட தோ? என்ற சந்தேகமும் இருக்கிறது. கொரோனா மரணத்தைப் போல… கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். ஒரு கொள்ளை நோய் வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தை வைரஸை போல விரட்டுவதற்கு சூளுரைப்போம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி https://t.co/mw9jf6ZIEn
— M.K.Stalin (@mkstalin) July 23, 2020