கள்ளத் தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2500 ரூபாய் விற்கப்படுகிறது. ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் மிளகு போன்றவற்றை கடத்த உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்தியோக செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை ஒன்று அமைத்து காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனவே வாகனங்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.
அப்போது அங்கே வந்த ஆம்னி வேன் ஒன்றில் வந்தவர்கள் போலீசை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் சோதனை நடத்தியதில் 15 மூட்டைகளில் 600 கிலோ மஞ்சள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் பாம்பன், குத்துகல் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் என்பவரின் படகு மூலம் இந்த மஞ்சளை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அப்துல்முபாரக், ஆம்ஸ்ட்ராங் ஆகிய 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ஆம்னி வேன் டிரைவர் ரியாஸ்கான் என்ற நபரை தேடி வருகிறார்கள். இங்கிருந்து மஞ்சளை கடத்தி சென்று அங்கிருந்து தங்கத்தை கடத்தி வரவும் திட்டமிட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.