5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலக நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தொற்றின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 400 மேற்பட்ட சடலங்கள் தெருக்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 62,357 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 2,273 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் குறைந்த அளவிலையே தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஐந்து தினங்களில் மட்டும் வீடுகளிலும் தெருக்களிலும் இருந்து 400-க்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நகரமான சாண்டா குரோஸில் அதிகாரிகள் 68 சடலங்களை மீட்டுள்ளன. பொலிவியாவில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி என சாண்டா குரோஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களாக இருக்கலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பரிசோதனை வரும்வரை இந்த மரணங்கள் சந்தேகத்திற்குரிய மரணமாகவே பார்க்கப்படும் என்றும் பொலிவியா அரசு தெரிவித்துள்ளது.