உத்திரப்பிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நான்கு கூடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் இருக்கின்ற சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் அங்கு இருக்கின்ற நான்கு கூடங்கள் கொரோனா மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சிறைச்சாலை இயக்குனர் கூறும்போது, சிறைச்சாலையில் முதலில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருந்ததாகவும் பின்னர் அவர்களுக்கு தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கின்ற அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது 126 பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
தற்போது வரை ஜான்சி மாவட்ட சிறையில் இருக்கின்ற 748 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்திருக்கின்ற நிலையில் 126 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் சிறையில் இருக்கின்ற நான்கு கூடங்கள் லெவன் ஒன் கொவைட் மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டுள்ளது. அதில் 120 நபர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர். மேலும் சிறைச்சாலையில் மூன்று மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு கைதிகளை கண்காணித்து வருகின்றனர். அது மட்டுமன்றி கைதிகளுக்கு போதுமான சிகிச்சை கிடைப்பதற்கு ஜான்சி மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு அனுப்ப தயார் என சிறை அதிகாரி கூறியிருக்கின்றார்.