வான்வழி தாக்குதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பாலகோட்டு பகுதியில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. எப்.16 ரக போர் விமானம் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும ஆதாரங்களையும் அனுப்பி வைத்தது.
F16 ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும், பிற நாடுகள் மீது இந்த விமானத்தை பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது.ஆனால் பாகிஸ்தான் இந்த ஒப்பந்த விதிகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “ஃபாரீன் பாலிசி” என்ற பத்திரிக்கை அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தானில் இருக்கும் F16 ரக விமானங்கள் எத்தனை உள்ளது என்று எண்ணி பார்த்ததாகவும்,அதில், அமெரிக்காவினால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை எதுவும் குறையவில்லை என்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.“இரு தரப்பு மோதலின் போது மிக் 21 ரக போர் விமானம், பாகிஸ்தானின் F16 விமானத்தை நவ்சேகரா செக்டார் பகுதியில் சுட்டு வீழ்த்தியது,” என்று இந்திய விமானப்படை கூறியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்த நாட்டின் F 16 விமானம் ஒன்று நிலைக்கு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.