ஆஸ்திரேலியாவில் 13 வயது சிறுமி பலமுறை தற்கொலை முயற்சி செய்து தற்போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெரோன் சேவேஜ் என்பவருக்கு கேடே என்ற 13 வயது மகள் உள்ளார். அச்சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிரே விழுந்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். அதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். பின்னர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட அச்சிறுமி இறந்து விடுவார் என மருத்துவர்கள் கூறியதால் தன் மனதை முழுவதுமாக நிலைப்படுத்திக் கொண்டு அதனை ஒப்புக்கொண்டுள்ளார் மெரோன். இதை அடுத்து சிறுமியின் உயிர் பிரிந்தது.
இத்தகைய நிகழ்வு பற்றி மெரோன் கூறுகையில், “சென்ற இரண்டு மாதங்களில் மட்டுமே என் மகள் 10 முறை தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது 11-வது முறை மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் என்னை விட்டு முழுவதுமாக பிரிந்துவிட்டார். என் மகளின் வாழ்க்கை குறுகிய கால கட்டத்தில் முடிந்து போனதற்கு பெர்த்தின் மன நல அமைப்பு தான் முழு காரணம் என கூறினார். மேலும் 16 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு பொது சுகாதார உள் நோயாளி பராமரிப்பு மனநல சிகிச்சை வசதி எதுவும் இல்லை. தன் மகளுக்கு தற்கொலை எண்ணம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது எனவும் சம்பவம் நடந்த நாள் செல்லப்பிராணிகள் விற்பனையகத்திற்கு நானும் கேடேவும் சென்றோம், அவளுக்கு செல்லப்பிராணிகள் என்றாலே அதிக ஆசை” என மிகுந்த வருத்தத்துடன் கூறியிருக்கின்றார்.