காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று போராட்டம் நடத்திய நிலையில் அரசியலமைப்புபடியே செயல்படுவேன் என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, சட்டசபையை நிறுவ வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் செயல்பட்டனர். சட்டசபை கூட்டத்தை நிறுவுவதற்கான தேதியை தெரிவிக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்றும், மதிப்புக்குரிய கவர்னர் அவர்களே சட்டசபையை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டவாறே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் அவர், “சட்டசபையை கூட்ட வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டால், சட்டசபையை கூட்டுவது பற்றி பரிசீலிக்கலாம்’ என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், போராட்டத்தை கைவிட்டுவிட்டு முதல்-மந்திரியுடன் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றனர். ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது: “அரசியலமைப்புப்படியே செயல்படுவேன்.
ஒரு குறுகிய காலத்தில் சட்டமன்றத்தை கூட்ட கெலாட் எந்த அஜெண்டாவும் கொடுக்கவில்லை, நிகழ்ச்சி நிரலையும் கொடுக்கவில்லை. எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடுவதற்கு முன்பாக சில விஷயங்களில் மாநில அரசாங்கத்தினுடைய தெளிவான பதில்கள் தேவைப்படும். சாதாரண செயல்பாட்டின் கீழ், சட்டமன்றத்தை கூட்ட 21 நாள் தேவை. சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய தேதி அமைச்சரவைக் குறிப்பில் குறிக்கப்படவில்லை, அதற்கான ஒப்புதலும் அமைச்சரவையால் வழங்கப்படவில்லை” என்று அவர் கூறினார். அனைத்து எம்.எல்.ஏ.க்களின் சுதந்திரத்தையும் சுதந்திரமான இயக்கத்தையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். கொரோனா பற்றிய நெருக்கடியை கவனத்தில் கொண்டும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டும் அமர்வு எவ்வாறு நடத்த முடியும் என்றும் கவர்னர் சார்பில் கூறப்பட்டுள்ளது.