ஆன்லைன் படிப்பிற்காக தனது பசு மாட்டை விற்று ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய குடும்பத்தினருக்கு பிரபல நடிகர் சோனுசூட் உதவி செய்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால்ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஏதேனும் ஒன்று தேவையாக இருக்கிறது. இதை வாங்குவதற்கு ஏழ்மையில் உள்ளவர்கள் தவிக்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கும்மர் என்ற கிராமத்தில் வசித்து வரும் குல்தீப் குமார் தனது குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் படிக்க ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளார். அதற்காக ரூ 6000 தேவைப்பட்டுள்ளது. அவர் வங்கி மற்றும் தெரிந்தவர் என்று அலைந்து கடன்கள் கேட்டும் யாரும் உதவாத காரணத்தால் அந்த தொகையை அவரால் திரட்ட இயலவில்லை.
எனவே தனது பிழைப்பிற்காக வைத்திருந்த பசு மாட்டை விற்று குழந்தைகள் படிப்பிற்காக ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுபற்றிய சமூக ஊடகங்களில் செய்தி வெளியானதை கண்ட நடிகர் சோனு சூட் அவருக்கு உதவுவதற்கும், பசுமாட்டை மீட்டு கொடுப்பதற்கும் முன்வந்துள்ளார். அவருடைய முகவரி உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அந்த ஏழைக் குடும்பத்திற்கு சோனு சூட் உதவி செய்துள்ளார். இவர் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி, போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அருந்ததி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் சோனு சூட் நடித்துள்ளார்.