ஊரடங்கு வறுமையால் பச்சிளம் குழந்தையை ரூ.45 ஆயிரத்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அசாம் மாநிலத்தில் கோக்ரஜார் என்ற மாவட்டத்தில் ஒரு வனப்பகுதி கிராமத்தில் தீபக் பிரம்மா என்பவர் வசித்துவருகிறார். அவர் ஊரடங்கு காலத்திற்கு முன்பு குஜராத் மாநிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அங்கு தன் உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. அதனால் மிக வறுமையால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் மனைவி சென்ற மாதம் இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றுள்ளார். அதனால் குடும்பச் செலவு மிக அதிகமாகி உள்ளது.
இச்சூழ்நிலையில் அந்த பச்சிளம் குழந்தையை 2 பெண்களிடம் ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதனை உடனடியாக அறிந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நூதனமாக செயல்பட்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் தீபக் பிரம்மா மற்றும் குழந்தையை வாங்கி சென்ற இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.