தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடிய பின் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும் தற்போது தன்னிடம் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் கெலாட் இறங்கியுள்ளார். இதற்காக மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த கெலாட் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால், முதல்வரின் கோரிக்கையை கவர்னர் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இதனால் ஜெய்ப்பூரில் தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் கெலாட் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கெலாட், “தேவை என்றால் நாம் டெல்லி ராஷ்டிரபதிபவன் சென்று குடியரசுத்தலைவரையும் சந்திப்போம். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு நாம் போராட்டத்திலும் ஈடுபடுவோம்’ என்றார்.