அமெரிக்க அரசு பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையானது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாடு வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கல்வி கற்பதற்கு சிறந்த இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலானோருக்கு எப்1, எம்1 ஆகிய கல்வி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகின்றது. சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களே அமெரிக்காவில் அதிக அளவு விசா பெற்று கல்வி பயின்று கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தென்கொரியா, சவுதி அரேபியா, மற்றும் கனடா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் அமெரிக்கா செல்கின்றனர்.
அமெரிக்காவின் கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா காரணத்தால் அமெரிக்காவில் இருக்கின்ற பல்கலைக்கழகங்கள் தற்போதைய ஆண்டின் பாடங்களை ஆன்லைன் மூலமாக எடுத்து வருகின்றனர். இத்தகைய செயலானது ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு செல்ல வேண்டும் என அமெரிக்க குடியுரிமை துறை சென்ற மாதம் அறிவித்திருந்தது. அதற்கு எதிராக மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் வெளிநாட்டு மாணவர்களும் பல்கலைக்கழகமும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அத்தகைய முடிவு திரும்பப் பெறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் இருக்கின்ற பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயில்வதற்கு வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. அதுதொடர்பாக அமெரிக்க நாட்டின் குடியுரிமை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” மார்ச் 9 ஆம் தேதிக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கக்கூடாது” என கூறியுள்ளது. அதே நேரத்தில் மார்ச் 9 ஆம் தேதிக்குள் கல்வி விசாக்களை பெறுகின்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு எத்தகைய தடையுமில்லை எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசின் இத்தகைய அறிவிப்பானது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்புகின்ற புதிய மாணவர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது