Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காத போலீசார்… தீக்குளிக்க முயன்ற முதியவர்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

நடவடிக்கை எடுக்காத காவலர்களால் மனமுடைந்த முதியவர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பழைய ரயில்வே லைன் பகுதியில் கோபால் என்ற முதியவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் சென்ற 2000 ஆம் ஆண்டு சம்பத் என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வருகிறார். சில நாட்களுக்குமுன் மதிகோண்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் என்ற நபர் அவர்களது கூட்டாளிகளுடன் கோபால் குடியிருக்கும் வீட்டிற்கு வந்து, அந்த வீடு தங்களுக்கு சொந்தமென கூறி தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் கோபால் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் கண்ணாயிரம் மற்றும் அவர்கள் கூட்டாளிகள் மீது புகார் கொடுத்துள்ளார். புகார் அளித்தும் காவல்துறையினர் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கானது நிறுவையில் இருக்கின்ற நிலையில், மீண்டும் தகராறில் ஈடுபட்ட அவர்கள் சென்ற சில நாட்களுக்கு முன் கோபாலின் வீட்டை பிடிப்பதற்காக வந்திருக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில் மீண்டும் காவல் நிலையத்திற்கு கோபால் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் கோபாலின் வீட்டை அபகரிக்க முயலும் தரப்பினருக்கு சாதகமாக பேசியதோடு மட்டுமல்லாமல், கோபாலையும் அவரது இரு மகன்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதியவர் கோபால் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன், ‘தங்கள் வீட்டை மீட்டு தருமாறு’ மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க சென்றுள்ளார்.அப்போது அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் மனம் உடைந்த முதியவர் கோபால், தனது குடும்பத்தினருடன் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு  பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Categories

Tech |