கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஆம்புலன்சில் கூட்டிச் செல்ல டிரைவர் அதிக பணம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா மாநிலம் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாத குழந்தை, மற்றும் 9 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐ.சி.எச் குழந்தைகள் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இந்நிலையில், சிறுவர்களை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவர்களின் தந்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.
பின்னர், சிறுவர்கள் மற்றும் அவரது தாயார் ஆகியோர் ஆம்புலன்சில் ஏறிய நிலையில் வாகன ஓட்டுநர் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு செல்ல 9, 200 ரூபாய் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை பணம் இல்லை என்று ஓட்டுனரிடம் கெஞ்சி கேட்டு உள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதனை பொருட்படுத்தாமல் உள்ளே இருந்த சிறுவர்கள், தாயாரை வாகனத்தைவிட்டு இறங்குமாறு கூறி இருக்கிறார்.
இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துநின்றபோது ஐ.சி.எச் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின் 2ஆயிரம் ரூபாய் தருவதாக முடிவுசெய்தனர். இது பற்றி சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில், “ஐ.சி.எச் மருத்துவமனையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு என் மகன்களை அழைத்துச்செல்ல வாகன ஓட்டுநர் ரூ 9,200 கேட்டார் . நான் அவரிடம் அவ்வளவு பணம் செலுத்த முடியாது என்று கூறி, அவரிடம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தேன், ஆனால் அவர் எந்த ஒரு கவனமும் செலுத்தவில்லை” என்று கூறினார்.