ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுரு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 563ஆக அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்துள்ள அனைவரும் கொரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி பாகாடியா மருத்துவமனை மருத்துவர் திலீப் சோனி கூறும்பொழுது, “ஹரித்வாரிலிருந்து திரும்பிய தந்தை, மகன் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அவர்களது குடும்பத்தினர் உள்பட 86 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினர் அப்பகுதி முழுவதும் சீல் வைத்து கிருமி நாசினி தெளித்துு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சுரு பகுதியில் 563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த பகுதி கொரோனா தீவிரமடைந்த பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 25,306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 9,379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 613 பேராக உள்ளது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.