பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நெருக்கடியான சமயத்தில் கேப்டன் தோனி தீபக் சாஹரிடம் ஆலோசனை வழங்கினார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் ஏன் தோனிக்கு இன்றளவும் இருக்கிறார்கள். ரசிகர்களின் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மிகப்பெரியது . சென்னை ஸ்டேடியத்தில் மட்டுமில்லாமல், அவர் செல்லும் இடமெல்லாம் தோனிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இங்கு நான் வந்திருப்பது தோனி ஒருவருக்காக மட்டும் தான்’ என்று மும்பை வான்கடே மைதானத்தில் வயதான மூதாட்டி ஒருவர் பதாகையுடன் வந்திருந்தார். இத்தனை ரசிகர்களின் அன்பிற்கும் பங்கம் வராத அளவிற்கு தன்னுடைய திறமையை கேப்டன் தோனி தொடர்ந்து நிரூபித்து கொண்டே வருகிறார்.நேற்றைய போட்டியிலும் அதனை சிறப்பாக செய்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருசிகர வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இருந்தாலும் துல்லியமான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை 138 ரன்களுக்கு சி.எஸ்.கே சுருட்டியது . கடந்த சில ஆட்டங்களில் பீல்டிங்கில் சென்னை அணி சொதப்பி வந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் பீல்டிங் மிக சிறப்பாகவே இருந்தது. அதேபோல், சி.எஸ்.கே வெற்றி பெற 3 சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியமான காரணமாக இருந்தார்கள்.
இவையெல்லாம் இருந்தாலும், கேப்டன் தோனியின் பங்களிப்பு இந்தப் போட்டியில் மிக முக்கியமானது. போட்டி முடிந்த பின்பு , ட்விட்டர் கமெண்ட்டில் ஒருவர், ‘கேப்டனுக்கும் மேன் ஆஃப் தி மேட்ச்’ கொடுப்பது போல் இருந்தால் அது தோனிக்கு தான் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆம், தோனியின் அனுபவமிக்க கேப்டன்ஷிப் வீரர்களுக்கு மிக உதவியாக இருந்தது. தொடக்கத்தில் 2 விக்கெட் வீழ்ந்துவிட்டாலும், கே.எல்.ராகுல், சர்பராஸ் கானின் கூட்டணி ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் இழுத்து கொண்டு சென்றது. இருவரும் அரைசதம் கடந்து , 100 ரன்களுக்கு மேல் அடித்தனர். இருப்பினும் நம்பிக்கை தளராமல் கேப்டன் தோனி இருந்தார்.
வழக்கமாக தல தோனி சுழற்பந்து வீச்சாளர்களுக்குதான் அதிக ஆலோசனை கூறி அணியை வழி நடத்துவார் என்று கூறுவர். ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில் டெத் ஓவரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அற்புதமாக ஆலோசனை சொல்லி ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக கொண்டு வந்தார். கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 39 ரன்கள் தேவை. 19 வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தினையே ‘நோ’ பாலாக வீசினார். அதில், சர்பராஸ் கான் பவுண்டரியை அடித்தார். அவர் பந்து வீசாமலே 5 ரன்கள் வந்துவிட்டது. ப்ரீ ஹிட் வேறு. அந்த ப்ரீ ஹிட் பந்தும் ‘நோ பாலாக வீசினார். அதில் 2 ரன்கள் அடிக்க மொத்தம் 3 ரன்கள் கிடைத்தது. ஒரு பந்து கூட வீசப்படவில்லை, ஆனால் 8 ரன்கள் சென்றுவிட்டது. ஸ்டேடியத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் அனைவரும் டென்ஷன் ஆகிவிட்டதால் ஆட்டமே சற்று பரபரப்பாக மாறிவிட்டது.
கேப்டன் தோனி நேராக தீபக் சாஹரிடம் சில நொடிகள் பேசினார். அவர் ஆலோசனைகளை வழங்கி பதட்டத்தை குறைத்தார். அதன் பிறகு அடுத்த 6 பந்துகளையும் தீபக் சாஹர் அற்புதமாக வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, டேவிட் மில்லர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் போட்டி சி.எஸ்.கேவின் கைக்கு வந்து விட்டது . கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணி வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஓவரில் ஒரு விக்கெட்டும் எடுக்கப்பட்டது. பேட்டிங்கில் வழக்கம் போல் சிறப்பான முறையில் பினிஷிங் செய்தார் தோனி. கடைசி கட்டத்தில் அவர் அடித்த 37 ரன்கள் அணிக்கு மிக உறுதுணையாக இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த சி.எஸ்.கே ரசிகர்களுக்கு மீண்டும் வெற்றியை தோனி பரிசாக அளித்துள்ளார்.