அமெரிக்காவில் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள உட்டா மாகாணத்தில் மேற்கு ஜோர்டான் நகரில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து பி.ஏ.32 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி, 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தமாக 6 பேர் இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதியின் மேலே பறந்து கொண்டிருக்கும்போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்தது.
இதனால் விமானம் தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானி ,1 பெண் மற்றும் 9 வயது சிறுமி என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த மற்றொரு பெண், சிறுவர்கள் மற்றும் விமானம் விழுந்த வீட்டில் இருந்த பெண் என 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.