சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மரணத்தில் சதி உள்ளதாக உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கோட்டையம் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஐ சேகர் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் இருந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில் வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மனைவி தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கதறி அழுதார். ஒருவாரமாக வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை என எஸ்.ஐ சேகர் கூறி வந்ததாக தெரிவிக்கும் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்புகின்றனர். பணி சுமையால் தற்கொலையா கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா நடந்தது என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.