திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சாலையோர நிழற்குடையில் பெண் குழந்தை விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தைகளை பிறந்த உடனே கள்ளிப்பால் ஊற்றி கொல்வதும் வீதிகளில் வீசி எறியும் அவலமும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. திருச்சி மாவட்டம் சேத்துப்பட்டு என்ற இடத்தில் சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரலை அங்கிருந்தவர்கள் கேட்டனர். அழுகை குரல் கேட்ட இடத்திற்கு சென்று அவர்கள் பார்த்தபோது கூடை ஒன்றில் 3 மாத பெண் குழந்தை இருந்தது.
அழுகுரலுடன் கூடையில் கிடந்த அந்த குழந்தையை வெளியே எடுத்தபோது மகிழ்ச்சியுடன் சிரித்ததை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த குழந்தையை எடுத்துச் சென்று சைல்ட்லைனில் ஒப்படைத்தனர்.