உயர்கல்வி விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்க விட்டு விட்டு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பல்வேறு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களுடன் இணைந்து அனுப்புவதற்காக வருவாய் சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமளவில் மாணவ மாணவியர் குவிந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு அதே வளாகத்திலுள்ள வருவாய்த்துறை அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த அலுவலகம் மூடப்பட்டு தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் ஏராளமான மாணவ மாணவியர் தனி மனித இடைவெளி குறித்து துளி கூட பொருட்படுத்தாமல் ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவ மாணவியரை கடுமையாக எச்சரித்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.