அசாம் பீகாரை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
உத்தரகாண்ட் வழியாக பாயும் கோசி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதிக்கு அருகில் உள்ள பங்கப்பணி மற்றும் பிறிதுரோகர் என்ற கிராமங்களுக்கு அருகே உள்ள பாலம் ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. உத்தரகாண்டில் கனமழை பெய்து வருவது கடந்த 2013-2019 இல் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பேரழிவை நினைவு கூறுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்று முன்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பீகாரில் பெய்து வரும் கன மழையால் பல லட்சம் பேர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இங்கு 11 மாவட்டங்களில் 25 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதேநேரம் இரண்டு மாதங்களாக அசாமில் துவம்சம் செய்து வந்த கனமழை சற்று ஓய தொடங்கியுள்ளது. ஆங்காங்கே வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. அசாமில் உள்ள பாதிப்பால் 103 பேர் இறந்துவிட்டனர். இவர்களில் 26 பேர் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களாவர். டெல்லியிலும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.