புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் காளான் விற்பனை சரிவடைந்ததால் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர் ஒருவர் வேளாண் அறிவியல் நிலைய ஆலோசனைப்படி காளான் பிரியாணி செய்து நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர். கடந்த 1996 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் பெரும் தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு முறையை கற்றார். அதன்பின் அரசுப்பணியில் விருப்பு ஓய்வு பெற்ற அவர் இயற்கை முறையின் பால் காளான், சிற்பி காளான் ஆகியவற்றை விற்பனை செய்தார். இதற்காக மத்திய அரசாங்கத்தால் சிறந்த காளான் உற்பத்தியாளர் என்கின்ற தேசிய விருதையும் பெற்றார். இந்நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட காளான்களை நாள்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான காளான்கள் கொரோனா ஊரடங்கால் குப்பையில் கொட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனினும் மனம் தளராத சுந்தரமூர்த்தி வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆலோசனைப்படி காளான் பிரியாணி செய்து புதுச்சேரி நகர் பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதென முடிவெடுத்தார். அதன்படி முதல் விற்பனையை பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் முதல்வர் திரு. ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கால் காளான் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் மாற்று தொழில் சிந்தனையில் பிரியாணி தயாரிப்பாளராக புதிய பரிணாமம் பெற்றுள்ள சுந்தரமூர்த்தி தன்னம்பிக்கையின் முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறார்.