செம்பட்டி பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து நடத்தி வந்த போலி மருத்துவர்கள் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடப்பட்டி என்ற பகுதியில் பெருமாள் என்பவர் வசித்துவருகிறார்.அவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் சொந்தமாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில் இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மற்றும் செம்பட்டி காவல்துறையினர் சேர்ந்து அந்த கிளினிக்கில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது பெருமாள் மருத்துவருக்கு படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதுபற்றி செம்பட்டி காவலதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார்கள்.அங்கு இருந்த அனைத்து மருந்துகளும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரது கிளினிக்கில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதைப்போலவே மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் கொடைரோட்டில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.அந்த கிளினிக்கில் அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வேதஞானலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது கனகராஜ் மருத்துவருக்கு படிக்காமல் அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதுபற்றி அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்துள்ளனர்.