Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – பெயர் சூட்டி காப்பகத்திற்கு அனுப்பி வைத்த அமைச்சர்

சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இரண்டு வார தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை அருகே குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிள குழந்தை ஒன்று கடந்த 14ஆம் தேதி மீட்கப்பட்டது. குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை ஒரு கிலோ 600 கிராம் எடையில் பலவீனமாக இருந்தது. இந்த குழந்தை குறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவே அவர்கள் அதை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு வாரங்களாக குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அரசு தாய்ப்பால் வங்கி உதவியுடன் குழந்தைக்கு பசி ஆற்றப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நேசத்தால் பாதுகாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் குழந்தையின் உடல்நிலை சற்று தேறிய நிலையில் அதனை காப்பகத்துக்கு அனுப்ப சமூக நலத்துறை முடிவெடுத்தது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைக்கு முத்தமிழ்செல்வன் என பெயர் சூட்டி அவர்கள் குழந்தையை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் சுதந்திர தினத்தன்று சாக்கடையில் மீட்கப்பட்ட குழந்தையும் இது போல் பெரிதும் பேசப்பட்ட நிலையில் இப்போது  மீண்டும் ஒரு குழந்தை மீட்கப்பட்டு அதற்கு உயிர் கொடுத்திருப்பது மனித நேயத்துக்கு சான்றாகவே  அமைந்துள்ளது.

Categories

Tech |