சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை வேட்டையாடி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
நாட்டிலே அதிக அளவு கொரோனா தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே தான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் ஊரடங்கு தளர்வு என்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மையமாக விளங்கிய தலைநகர் சென்னையில்… பல்வேறு கட்டுப்பாடு, ஊரடங்கு, கண்காணிப்பு, சுகாதார தடுப்புப் பணி என ஏராளமான விஷயங்களை துரிதப் படுத்திக் கொரோனா தாக்கம் குறைக்கப்பட்டது. ஆனால் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கின்ற சூழலில்தான் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக சென்னையில் எப்படி கொரோனவை கட்டுபடுத்தினோமோ ? அதே போல் பிற மாவட்டங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழகஅரசு உள்ளது. அதற்கு மிகப்பெரிய ஆயுதமாக இருப்பதுதான் ஊரடங்கு. எனவே இந்த ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்த ஏராளமான விஷயங்களை இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடுக்க இருக்கிறார். குறிப்பாக மேற்கு வங்க மாநிலம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பிற மாவட்ட மாநிலங்களும் இதே போல ஒரு சூழல் நிலவுவதால் தமிழகத்திலும் நிச்சயம் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுக் கட்டுப்பாடு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. என்ன இருந்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நாம் மீண்டும் ஊரடங்கை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பொதுமக்களும் கொரோனாவை ஒழிப்பதற்கு தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால், அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டி ஏற்றுக்கொள்கின்றனர்.