Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால் ரயில்வே துறை பாதிப்பு…. 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என தகவல்…!!

கொரோனா வைரஸ் காரணமாக ரயில் வண்டிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்திய ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக ரயில் உள்பட பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் வேலை பார்த்து  வந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு முடியாமல் பல வழிகளிலும் இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர்.

பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால், ரயில்வே துறையின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் நேற்று வெளியிட்ட தகவலில், ” சென்ற ஆண்டு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைந்த நிலையில், இந்த வருட பயணிகள் ரயில்கள் மூலமாக 10 முதல் 15 விழுக்காடு மட்டுமே வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். தற்போது ரயில்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால், ரூ. 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்”  என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், “பயணிகள் ரயிலில் வருவாய் இழப்பு ஏற்பட்டதால், நாம் அதனை சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலம் ஈடுசெய்ய வேண்டியுள்ளது. எனவே, சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா நேரத்தில், 231 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 75 விழுக்காடு இருக்கைகள் நிரம்புகின்றன.

சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று தீவிரமாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டு அளவை விட சரக்கு போக்குவரத்து குறிப்பிடத்தக்க மைல் கல்லை இந்திய ரயில்வே எட்டியுள்ளது. ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி, 3.13 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு 3.12 மெட்ரிக் டன் ஆக இருந்தது.­ உள்கட்டமைப்பு மேம்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 50 விழுக்காடு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களின் வேகம் 45-45 கி.மீ வரை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு ரயில்களில் வர்த்தகர்களை ஈர்ப்பதற்காக, கூடுதல் கட்டணங்களை திரும்பப் பெறவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

Categories

Tech |