திருப்பூரில் மது அருந்திவிட்டு போதையில் சேட்டை செய்த சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் நன்கு குடித்துவிட்டு போதையில் அவர்கள் வீடு அருகில் இல்லாத தெரு ஒன்றிற்குச் சென்று கையில் கத்தியை வைத்துக்கொண்டு தெருவில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். சிறிதுநேரம் சிறுவர்களை கண்டுகொள்ளாத தெரு மக்கள் அவர்கள் சேட்டை அதிகமாக செய்ய ஆரம்பித்தவுடன் ஆத்திரம் கொள்ளத் தொடங்கினர். பிறகு சிறுவர்கள் அங்கே உள்ள செடிகளை கத்தியால் வெட்டுவது, பூந்தொட்டிகளை உடைப்பது, பொருட்களை சேதப்படுத்துவது என எல்லை மீறிச் செல்ல, ஆத்திரத்தை அடக்க முடியாத தெரு மக்கள் ஒன்றுகூடி சிறுவர்களை பிடிக்க முயன்றனர்.
இதனால் உஷார் அடைந்த சிறுவர்கள் தப்பி ஓட முயன்ற போது, அதில் இரண்டு பேர் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களைப் பிடித்த பொதுமக்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இரண்டு சிறுவர்களையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மது அருந்தும் அளவிற்கு சிறுவர்களுக்கு பணம் ஏது? 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மதுபான கடையில் மது வழங்க கூடாது என்பது விதிமுறை. அதை மீறி இவர்களுக்கு மதுபான பாட்டில்களை எந்த கடை வழங்கியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.