ஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த நில மோசடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சாமானியர்கள் பாதிக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம் இப்போதோ பிரபலங்கள் பலர் ரியல் எஸ்டேட் மோசடியில் பல கோடி ரூபாய் ஏமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்று நீள்கிறது அந்த பட்டியல். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் கொட்டரெட்டி மற்றும் சுதிர் ரெட்டி இவர்கள் ஆதித்யா ஹோம்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் திடீரென ஏற்பட்ட கருத்து மோதலின் ஒவ்வொருவரும் அவரவர் செய்த மோசடிகளை மாறி மாறி புகார் கூற ஆரம்பித்தனர்.
இதில் தான் வெளிச்சத்திற்கு வந்தது பிரபலங்கள் ஏமார்ந்த கதை. ஹைதராபாத் ரங்காரெட்டி மாவட்டம் மகேஸ்வரன் மண்டலம் ராவுரியாலா கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி உள்ள பகுதியில் கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை அது அரசுக்கு சொந்தமான இடம். ஆனால் அதை மறைத்து ஒரு ஏக்கர் 1 கோடி ரூபாய் என்று கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என்று தெரிவிக்காமல் மோசடியாக விற்பனை செய்துள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதத்தில் நடிகைகள் நயன்தாரா ரம்யா கிருஷ்ணனுக்கு தலா ஒரு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
அதேபோல் ஆந்திராவை சேர்ந்த 5 எம்.பி. களுக்கும் மோசடியாக விற்பனை செய்துள்ளார் என்று கொட்டரெட்டி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இயக்குனர் சுதிர் ரெட்டி முன்வைத்துள்ளார். மேலும் விற்பனை செய்யும் போது அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிவிக்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த குறிப்பிட்ட நில வணிக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு இந்த நில மோசடி சம்பவம் ஒரு உதாரணம் இதில் பிரபலங்களில் விதிவிலக்கு அல்ல.