தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையத்தில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டர்.
பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 18ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 120 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை மைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு சிகிச்சை பெற்று வரும் நோய் தொற்றாளர்களின் நலன் குறித்தும் அங்கு வழங்கப்படும் உணவு முறை குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் சம்பா இட்லி, மதிய உணவுக்கு எள்ளு சாதம், கறிவேப்பிலை துவையல், அரிசி சாதம், மிளகு குழம்பு, பொண்ணாங்கண்ணி கூட்டு, அவரைக்காய் பொரியல், தூதுவளை ரசம், ஐங்காய மோர் ஆகிய உணவுகள் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ குணமுடைய உணவுகள் நோயாளிகளின் அன்றாட உணவு முறைக்கு ஏற்றார் போல் இல்லை என்பதால் சிலர் இதனை ஏற்க மறுப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.