காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள படப்பை ஆதனஞ்செரி என்ற பகுதியில் அஜய் (23) என்பவர் வசித்துவருகிறார். அவர் பல ரவுடி கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு ஆண்டிற்கும் மேலாக எந்த தவறுக்கும் செல்லாமல் திருந்தி குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த சமயத்தில் நேற்று முன்தினம் காலை படப்பை அடுத்துள்ள சாலமங்கலம் என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அஜய் வாகனத்தில் மோதி அவரை நிலைகுலைய செய்து இருக்கின்றனர். அதனால் கீழே விழுந்த அஜய் ஓட முயற்சி செய்து, தன்னை துரத்திய நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகிலிருந்த உணவகம் ஒன்றில் ஒளிந்து கொண்டுள்ளார்.
இருந்தாலும் அஜய்யை விடாமல் துரத்திய நபர்கள் உணவகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அஜய் இறந்ததை உறுதி செய்த பின்னர், அந்த நபர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த மணிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி முன்பகை காரணத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாரா என்று சந்தேகித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.