கேஜிஎஃப் 2 படத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் ‘அதீரா’ கதாப்பாத்திரத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டதை அடுத்து அந்தப் போஸ்டர் தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
கன்னடத் திரையுலகில் 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்’. இப்படத்தில் நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது.
தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்புக்கு கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றி முத்திரையை பதித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கருடன் கொல்லப்பட்டதற்கு பின்பு நடக்க இருக்கும் கதையை கூறுவதாக உள்ளது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் என்பவர் அதீரா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் சஞ்சய் தத்தின் கெட்டப் வலைதளத்தில் வைரலாகி வந்தது. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சஞ்சய் தத்துக்கு கேஜிஎஃப் படக்குழுவினர், அதீரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். படப்போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளத்தில் ட்ரென்ட் ஆகிவிட்டது. கேஜிஎஃப் ராக்கியை எதிர்த்து சண்டையிடும் பவர்புல் வில்லனாக சஞ்சய் தத் இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சஞ்சய் தத் இதற்கு முன்னர் ‘அக்னிபத்’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.