புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இளைஞன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவு சிகிச்சை கொடுப்பது அரசு மருத்துவமனையாகவே அமையப்பெற்றுள்ளது. சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அதிக அளவு நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தி வருகின்றனர். அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற தன் தந்தை கொரோனா இருப்பதாக கூறி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மருத்துவமனையில் உள்ள தன் தங்கைக்கும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தங்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.