ஆன்லைன் கல்வி விவகாரத்தில் பஞ்சாப் அரசைப் போல் தமிழக அரசு கட்டாயம் செயல்படும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பை காட்டிலும் பாதிப்பு தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக, பள்ளி கல்லூரிகள் தற்போதைக்கு சிறக்க வாய்ப்பில்லாததால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களால் இந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு பஞ்சாப் அரசு முதல் கட்டமாக அரசுப்பள்ளிகளில் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு 50,000 ஸ்மார்ட் போன்கள் வழங்க உள்ளது.
அதை தொடர்ந்து கணக்கெடுப்பின்படி, மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு செய்யக்கூடிய இந்த சாதனையை தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்தால் நன்றாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. பஞ்சாப் அரசு செய்தது போல் தமிழக அரசும் ஆன்லைன் கல்விக்கு ஏதாவது முக்கியமான நடவடிக்கையை கட்டாயம் எடுக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.