நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற உள்ளது. இதில், ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து தொடங்குவது உள்ளிட்ட அதிகப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதனிடையே, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று (ஜூலை 29) காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது, பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் அதிகமாக இருந்த கரோனா தொற்று, பின்னர் பிற மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுடன் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.