Categories
அரசியல்

மருத்துவ பணியில் உள்ளவர்களுக்கு… 2 நாள்களுக்கு ஒருமுறை முழு உடல் கவச உடை.. உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில்…!!

மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ  பணியாளர்கள் அனைவருக்கும் 2 நாள்களுக்கு ஒருமுறை கவச உடைகள் வழங்கப்பட்டு வருவதாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியில் இருப்பவர்களின் விவரங்கள், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், “இரண்டு நாள்களுக்கு ஒரு முறையென தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், இணை, துணை சுகாதார ஆணையர் அலுவலகங்கள், 108 ஆம்புலன்ஸ்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள், சென்னை மாநகராட்சியின் சுகாதார அலுவலர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தேவையானதை விட அதிக அளவிலான N95 முகக் கவசங்கள், மூன்றடுக்கு முகக்கவசங்கள், முழு கவச பாதுகாப்பு உடைகள் (PPE) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள், கொரோனா சிகிச்சையில் முன் களப்பணியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த 10 ஆயிரத்து 336 பணியாளர்களுக்கு நாள்தோறும் முழு உடல் கவசம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக உள்ள கையிருப்பு, தலைமையிடத்தில் உள்ள கையிருப்பு என ஜூலை 23ம் தேதி நிலவரப்படி, 6,52,695 முழு உடல் கவசங்கள், 5,8026 N95 முகக்கவசங்கள், 54,17,974 மூன்றடுக்கு முகக்கவசங்கள்,3,384 வென்டிலேட்டர்கள், கொரோனா பரிசோதனை செய்வதற்கான 2,78,505 பி.சி.ஆர் கருவிகள், ஆர்என்ஏவை பிரித்தெடுப்பதன் மூலம் கரோனா தொற்றை கண்டறிய உதவும் 3,41,294 ஆர்என்ஏ கிட்கள் (RNA KITS) சேமிப்பில் இருக்கின்றன.

தமிழ்நாட்டிலுள்ள 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் நாள்தோறும் 3,070 மருத்துவர்கள், 3,591 செவிலியர்கள், 3,705 துணை மருத்துவப் பணியாளர்கள் என 10,366 பேர் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வார்டில் ஷிப்ட் முறையில், மூன்று ஷிப்ட்கள் என்ற அடிப்படையில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |