இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு முழுவதிலும் மாணவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நிலையில் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த வழக்கு இன்று நீதிபதி அசோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, யுஜிசி சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இறுதி தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஒருவேளை செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு பின்னர் வழங்கப்படும். இறுதி ஆண்டு தேர்வை நடத்தவில்லை என்றால் மாணவர்களின் எதிர்காலத்தை சரிசெய்வது என்பது மிக சிரமமாக இருக்கும். அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.