பக்ரீத் பண்டிகைக்கு ஒட்டகம் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி ஒட்டகம் கொண்டவரப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற 2008 ஆம் ஆண்டு, “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி இறைச்சிக்காக வெட்டப்படும் உணவுகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இடம்பெறவில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகங்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் படியும், மத்திய அரசு சட்டத்தின் படியும் இது குற்றம் ஆகும். இதனால் தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட தடை விதிக்க வேண்டும்” என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்ற 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதில், “விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி, தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்டுவதற்கு என தனியாக அறுவை கூடங்கள் கிடையாது. ஆடுகளை வெட்டுவது போல ஒட்டகங்களும் பிரத்தியேக அறுவை கூடங்கள் இருந்தால் மட்டுமே அதனை அனுமதிக்க இயலும். அதுபோன்று பிரத்தியேக அறுவை கூட வசதிகள் இல்லாததால் ஒட்டகங்களை வெட்டுவதை அனுமதிக்க முடியாது” என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதால், சட்டவிரோதமான முறையில் வாகனங்களில் ஒட்டகங்கள் கொண்டு வரப்படுகிறதா? தடையை மீறி வெட்டப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு காவல் ஆணையர் ஆணையிட்டுள்ளார். அதனால் சென்னை காவல் எல்லையில் காவல்துறையினர் அனைவரும் மிக தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.