ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
ஆப்கானிஸ்தானில் நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய போர் தொடங்கியதிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனிடையே தலிபான் பயங்கரவாதிகளுடன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதிக்குள் அமெரிக்கா தனது படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவெடுத்தது. இந்நிலையில் மத்திய லோகர் மாகாணத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து விட 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இத்தகைய வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.