ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேரும் என்ற தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா என்ற மிகக் கொடூரமான நோய் உலகம் முழுவதிலும் பரவியுள்ள நிலையில் 1.75 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6.67 லட்சம் மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலும் இருக்கின்றது. பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு, ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி, ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத்துறை சார்பில் இயங்கும் கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசி என்று பல தடுப்பூசிகள், மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெரும் போட்டிகள் உருவாகியுள்ளன.
இத்தகைய நிலையில் கமலேயா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசி மற்ற அனைத்து நிறுவனங்களையும் முந்திக்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வந்து சேரும் என்ற நம்பிக்கையினை உறுதி செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10 அல்லது 12 தேதிக்குள் இந்த தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை கட்டுப்பாட்டாளர்கள் பதிவு செய்து மூன்று அல்லது ஏழு நாட்களுக்குள் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேரும் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி யானது விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசியை இந்த மாதத்தின் தொடக்கத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அதன் முதற்கட்ட பரிசோதனை முடிவுக்கு வரும். இரண்டாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பது சென்ற 13ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. பொதுவாகவே ஒரு தடுப்பூசி மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்தபின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் வழக்கமான நடைமுறையானது பல மாதங்களுக்கு கொண்டு செல்லும். இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனையை முன்னரே முடித்து, இந்த தடுப்பூசியை மூன்றாவது கட்ட பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்னரே மக்கள் பயன்பாட்டிற்கு விட்டுவிடலாம் என்று ரஷ்யா திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.