உலக அளவில் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் மலையேறுபவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக, நேபாள அரசு உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற பயணம் செய்வதற்கான அனுமதியை சென்ற மார்ச் 13ஆம் தேதி முதல் தடை செய்திருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரம் மலையேற்றப் பயணம் தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி நேபாள சுற்றுலாத் துறையின் இயக்குனர் மீரா ஆச்சார்யா கூறும்போது, “மலைகள் தற்போது மலையேறுபவர்களுக்காக திறந்து விடப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக 414 சிகரங்கள் திறக்கப் பட்டிருக்கின்றன. ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில் உணவகங்கள், மலையேற்றம், மலையேறுதல் ஆகிய சேவைகள் அனைத்தும் வருகின்ற வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் பயணத்திற்கு 5,500 டாலர்கள் வசூல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் சர்வதேச விமானங்கள் செயல்பாட்டுக்கு வருகின்ற காரணத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.